கீழ்பவானி அணை திறப்பு மோசடிக்கு தமிழக முதல்வர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்!

67 ஆண்டு கால கீழ்பவானி கால்வாய் தண்ணீர் திறப்பில் நடக்காதது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் நடக்கலாமா?

இது வரலாற்றில் அழிக்க முடியாத கறை அல்லவா?

கீழ் கண்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு கீழ் பவானி கால்வாயில் தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் ஒரு அறிவிப்பாகும்.

அனைத்து திறக்கப்பட்ட சில மணி நேரத்திற்குள்ளாகவே மூடப்பட்டுவிட்டது. காரணம் அணையில் இருந்து வருகின்ற தண்ணீர் பிரதான கால்வாயில் ஐந்தாவது மைலில் வேலை நடைபெறுகிற இடத்திற்கு வந்தாலே அங்கு வேலை சிக்கல் ஆகி விடும் . தண்ணீரே கால்வாயில் நகர முடியாது என்பது தெரிந்தும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி தண்ணீரைத் திறந்து பிறகு மூடி வைத்து விட்டனர்.

அறிவிப்பு தமிழக முதல்வரின் பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்!

இந்த அறிவிப்பின்படி ஏன் திறந்த தண்ணீரை முறையாக படிப்படியாக அதிகரித்து கடைமடை வரை கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை என்பதற்கு ஆயக்கட்டு விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் அரசு சார்பில் விளக்கம் தெரிவித்தாக வேண்டும்.

ஆளுகிற அரசு வெளிப்படையாகவே இப்படி மக்களை ஏமாற்றினால் இனிமேல் அரசில் இருந்து வரும் அறிவிப்புகளை எப்படி மக்கள் நம்புவார்கள்?

அணைதிறப்பு நாடகம் என்பது தெரிந்து தான் ஈரோடு மாவட்ட அமைச்சரும் திருப்பூர் மாவட்ட அமைச்சரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இப்படி இவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது முன்கூட்டியே எங்களுக்கு வந்து சேர்ந்த செய்தி தான். வழக்கம் போல் வந்து அணையை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களுடன் நேர்காணல் செய்து பெருமை பேசிக் கொள்ளும் நீங்கள் நடக்கப் போவது மோசடி என்று தெரிந்து கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறீர்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்து இப்பொழுதும் விவசாயம் செய்து வரும் அதிகாரத்தில் உள்ள நீங்களே இதுபோல் செய்வது சரியானதா என்பதை மனசாட்சியிடம் கேளுங்கள். இது நேர்மையானதா? மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லவா? எத்தனை காலம் ஏமாற்றி விட முடியும்….. வேளாண்மை செய்வதென்பது இயற்கையோடு விளையாடும் விபரீத விளையாட்டாகும். மழையை நம்பி ,தண்ணீரை நம்பி பயிர் செய்து பயிருக்கான மூட்டுவலி செலவிற்கு பெரும் கடன் பட்டு, பயிரை நோயிலிருந்து பாதுகாத்து, விளைவித்து சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்று ஆண்டுதோறும் நட்டத்தையே சுமந்து வருகிறோம்.

 "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்"  நசிந்து போய் கிடைக்கிற  விவசாயிகள் வாழ்க்கையை மேலும் நசிவடைய வைக்கவா இப்படி வதைக்கின்றீர்கள்.  கொதிக்கிறது உள்ளம் ! ஐ.ஏ.எஸ் படித்தவர்கள்  பொறியியல் படித்தவர்கள்  மூன்று முறை நான்கு முறை இரண்டு முறை என அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர்கள் . மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள்  எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றவர்கள் என்று  இத்தனை மக்கள் பிரதிநிதிகள் இருக்கிற இந்த மாவட்டத்தில் உலகுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிற இது போன்ற ஒரு மோசடி வேலையை ஆளுகிற அரசு செய்யலாமா?  அதற்கு அமைச்சர்களும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் துணை போகலாமா?  உங்களை நம்பித் தானே நாங்கள் வாக்களித்து இருக்கின்றோம்.  எங்களை வாழ வைப்பீர்கள் என்று நம்பி தானே இருக்கிறோம்.  எதற்காக இந்த மோசடியை செய்கிறீர்கள் ? பதில் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொண்டிருப்பீர்கள் நாங்கள் நொந்து சாக வேண்டுமா?  இதற்காகவா உங்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமர வைத்தோம்.  பொறுப்பு வேண்டாமா ? நாளை மக்களை சந்திக்க வேண்டும் என்ற நேர்மை வேண்டாமா ? எந்த வித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் ஆயக்கட்டு விவசாயிகளை மட்டும் அல்லாமல் நாட்டு மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள்.  இதற்கு திராவிட முன்னேற்றக்  கழக அரசும்  இந்தப் பாசனப் பகுதியில் பொறுப்பேற்று இருக்கின்ற அமைச்சர்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.  எங்கள் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியும் அனுமதிக்க முடியாது ! பாவேந்தர் பாரதிதாசன் பாடினான்

“சிரமறுத்தல் வேந்தர்க்கு பொழுதுபோக்கு சிறுகதைகள் எங்களுக்கோ உயிரின் வாதை”

அதுபோல உங்களுக்கு இவையெல்லாம் அரசியல் சித்து விளையாட்டு . இது எங்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடும் விபரீத விளையாட்டு…. என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கின்றோம். நீங்கள் நாளை மக்களை சந்திக்க வந்தே ஆக வேண்டும். இது போன்ற துக்ளக் தர்பார்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

மேடையிலே பேசுவதும் செயலிலே நடப்பதும் தொடர்பு அற்றதாக இருக்கிறது. சனாதனத்தை எதிர்ப்பதற்காக உங்களோடு அணி சேர்ந்து நின்றவர்கள் நாளையும் நிற்கலாம் என்று இருப்பவர்கள்.

எங்களையே நீங்கள் எட்டி உதைத்து வெளியே தள்ளுகிறீர்கள். நீங்கள் சனாதனத்தை வீழ்த்துவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதை உங்கள் ஆட்சி நிர்வாகம் அன்றாடம் அறிவித்து வருகிறது. எச்சரிக்கை மணி அடிக்கின்றோம் மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள்.

கி.வே.பொன்னையன் தலைவர் தற்சார்பு விவசாயிகள் சங்கம்

சுப்பு மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் சங்கம் 16/08/2023