கீழ் பவானி சீரமைப்பு வேலைகளுக்காக தமிழக அரசு ரூ 709.60 கோடி ரூபாய் செலவில் ஒரு மாபெரும் திட்டத்தைக் கொண்டு வந்து அது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. தன்னல நோக்கத்திற்காக சிலர் இந்தப் பணிகளை இரண்டு ஆண்டுகளாக முறையாக செய்வதற்கு சிலர் இடையூறு செய்து வந்தனர். கீழ் பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் சார்பாக கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கமும் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றத்தில் சீரமைப்பு வேலைகளை முறையாக செய்வதற்கு தமிழக அரசுக்கு ஆணையிடும்படி முறையிட்டனர்.

ஆயக்கட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு 01/05/2023 முதல் சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும் என ஆணையிட்டது. மேலும் சீரமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்களின் ஆட்களுக்கும் வாகனங்களுக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கில் ஆணையிட்டு இருந்தது . ஆனால் அந்தப் பணிகள் முழுமையான வேகத்தில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

எனவே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்தத் தடையாக இருப்பவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு அது 03/06/2024 அன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் கீழ் பவானி சீரமைப்பு வேலைகளுக்கு வழங்கப்பட்ட அரசாணை எண் :276 ஐ நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் மாற்றம் செய்து புதிய திருத்தப்பட்ட அரசாணை ஒன்றையும் நீர்வளத் துறை வெளியிட்டது. இந்த திருத்தப்பட்ட அரசாணை நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மீறிய நிர்வாக நடவடிக்கையாகும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயக்கட்டு விவசாயிகள் சார்பில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதி அரசர்கள் ஜி ஆர் சாமிநாதன்- பாலாஜி அமர்வு இடைக்கால தடை விதித்ததோடு வழக்கை 04/06/ 2024 இல் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கப்படும் என்றும் ஆணையிட்டுள்ளது. இவ்வாறு முழுக்க, முழுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுமையான கண்காணிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு வேலைகளை இரண்டு ஒரு இடத்தில் சிலர் தங்களுடைய சுயநல நோக்கத்திற்காக தடுக்க முற்பட்டனர். வெள்ளோடு கனகபுரம் பகுதியில் ஊஞ்சலூர் பகிர்மானக் கால்வாயில் வேலைகளை தடுத்தவர்கள் மீது வெள்ளோடு காவல் நிலையத்தில் நீர்வளத்துறை புகார் அளித்து தற்போது அங்கு வேலைகள் தடையின்றி நடைபெற்று வருகிறது.

அதே போல் சென்னிமலை ஒன்றியம் பசுவபட்டி கிராமத்தில் பிரதானம் கால்வாய் மைல் 85 என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய வடிகால் பாலத்தை புதுப்பித்து வலுப்படுத்துவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு நீர்வளத் துறை வேலைகளை தொடங்கியது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை துச்சமென மதித்து சிலர் வேலைகளை தடுத்து நிறுத்தினர். உடனடியாக நீர்வளத் துறையின் உயர் அதிகாரிகளின் நேரடி தலையீட்டில் புகார் அளிக்கப்பட்டு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் வேலைகளை தடுத்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . அதில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு காவல்துறையின் மூலம் சட்டப்படியான அழைப்பாணை வழங்கப்பட்டு வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அரசு பணிகளை தடுத்ததற்காக இதச பிரிவு 353 என்ற பிணை மீளா (Nonbailable) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

கீழ்பவானி சீரமைப்பு வேலைகளில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு மட்டுமல்ல நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் புதிய நம்பிக்கை அளித்து வேலைகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் -15ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு ஏற்ற வகையில் வேலைகளை முழு வேகத்தோடு செய்வதற்கு ஒப்பந்ததாரர்களும் நீர்வளத் துறையும்போர்க்கால அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அவர்கள் தனது நேரடிக் கண்காணிப்பில் வேலைகளை அன்றாடம் கவனித்து தமிழக அரசுக்கு அறிக்கை செய்து வருகிறார்.

எனவே கீழ் பவானி ஆயக்கட்டு விவசாயிகள் அனைவரும் சீரமைப்பு வேலைகள் மிக நல்ல முறையில் நடந்து ஆகஸ்ட்- 15 ல் தண்ணீர் வருவதற்கு ஏற்ற வகையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு.

கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம். 30/05/2024

செய்தி

புகைப்படங்கள்