கீழ்பவானிக் கால்வாய் சீரமைப்பு வேலைகள் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலை தொடங்கப்பட்டவுடன் சீரமைப்பு வேலைகளை சிலர் எதிர்த்தனர். மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்கள் இருதரப்பிடமும் பேசி இணக்கமான தீர்வு ஏற்படுத்தி வேலைகளை செய்ய உதவி செய்வதாக அறிவித்தார் . அதன்படி ஆயக்கட்டு விவசாயிகள் அமைப்பு, அமைச்சர் முத்துசாமி அவர்கள் முன்வைத்த தீர்வு திட்டத்தை ஏற்று 52 கிலோமீட்டர் நீளம் பக்க சுவர் அமைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அதிகாரபூர்வமான கூட்டத்தில் ஆயக்கட்டு பாசன அமைப்புகள் ஒப்புதல் அளித்து விட்டது. பக்கச்சுவர் என்பது கால்வாயில் கரை பலவீனமான உள்ள 125 இடங்களில் கட்டப்படுவதாகும். இது கால்வாயின் மொத்த நீளத்தில் 10% என்பது குறிப்பிடத்தக்கது. பக்கச்சுவர் அமைப்பதால் கால்வாயின் வடிவமைப்பில் கிடைத்து வரும் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. சீரமைப்பு வேலைகள் குறித்த அறிக்கையில் 10% தான் பக்கச்சுவர் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தும் திட்டமிட்டு கால்வாய் முழுவதும் கான்கிரீட் செய்யப்படுவதாக சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் பொய் பரப்பரை செய்து வந்தனர். சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களின் பேச்சு வார்த்தையை உதாசீனப்படுத்தியே வந்தனர்.
இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் கோவையில் 2022 ஆம் ஆண்டு இந்தப் பாசன திட்டத்தில் உள்ள அமைச்சர்களான மாண்புமிகு முத்துசாமி மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் மாண்புமிகு செந்தில் பாலாஜி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அந்தியூர்செல்வராஜ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளையும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட நீர்வளத் துறை அதிகாரிகளையும் கொண்ட அரசு தரப்பிலான கூட்டத்தை நடத்தினார் . அந்தக் கூட்டத்தில் ஆயக்கட்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் . மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்கள் முன்வைத்த தீர்வு திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திலே ஆயக்கட்டு விவசாயிகளின் அமைப்புகள் சார்பில்ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் நிறுவளத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக் கூட்டத்திலும் அடாவடிகளை செய்தனர்.இதனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களின் வழிகாட்டலையும் மீறி நூற்றுக்கணக்கானோர் அத்துமீறி நட்சத்திர விடுதிக்குள் நுழைந்து அமைதியைக் கெடுத்தனர். கூட்டம் முடிவில் மிகப்பெரிய அளவில் காவல்துறை நட்சத்திர விடுதிக்குள் வந்து அமைச்சர்களை அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரசு தரப்பிலான அனைத்து முயற்சிகளும் சீரமைப்பு எதிர்ப்பாளர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட நிலையில் ஆயக்கட்டு விவசாயிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் இணை மனுதாரர்களாக(Impleading Petition) சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் சார்பில் 10 பேர் இணைந்து தங்களது கருத்துக்களை நீதிமன்றத்தில் வைத்தனர் . சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு சீரமைப்பு எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் ஆயக்கட்டு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் வல்லுனர் மோகனகிருஷ்ணன் குழுவின் அறிக்கை முன்வைக்கின்ற சீரமைப்பு திட்டம் தான் சரியானது என்றும் தீர்ப்பு வழங்கியது. மே 1 /2023 முதல் சீரமைப்பு வேலைகளை தொடங்கி நடத்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது. அத்தோடு ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து சீரமைப்பு வேலைகள் செய்கிற வாகனங்களுக்கும் ஆட்களுக்கும் பாதுகாப்புக் கேட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மேற்கு மண்டல ஐஜி உள்ளிட்ட மூன்று மாவட்ட கண்காணிப்பாளர்கள் முதல் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் கீழ் பவானி சீரமைப்பு வேலைகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெளிவாக ஆணையிட்டது. தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் போட்ட வழக்கை தள்ளுபடி செய்தது திட்டமிட்டபடி சீரமைப்பு வேலைகள் தொடங்கியது. பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத்தின் மூலமும் தங்களது சட்டவிரோத கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் சீரமைப்பு வேலைகள் தொடங்கிய நாள் முதல் சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் வேலைகளை அடாவடித்தனம் செய்து தடுத்து நிறுத்தி வந்தனர். நீர்வளத் துறை புகார் அளித்தும் எந்த புகாரையும் காவல்துறை ஏற்றுக்கொள்ளவில்லை. எழுமாத்தூரில் இரண்டு பெரிய ஹிட்டாச்சி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு படத்துடன் செய்தி ஊடகங்களில் எல்லாம் வெளியான பிறகும் அதற்காக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை . மேலும் சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் வெளிப்படையாகவே சீரமைப்பு வேலை செய்யும் ஆட்களை அடித்து விரட்டுவோம் என்றும் வாகனங்களுக்குத் தீ வைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வலுவான பிரச்சாரம் செய்தனர். அது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சான்று ஆவணங்களுடன் புகார் செய்யப்பட்டது. எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . ஆயக்கட்டு விவசாய சங்க நிர்வாகிகளை “வீட்டை விட்டு வெளியில் வந்தால் உயிரோடு இருக்க மாட்டாய்” என்று மொடக்குறிச்சி கரியாக்கவுண்டன் வலசு கிருஷ்ணமூர்த்தி என்பவர் பகிரங்கமாக வாட்ஸ் மூலம்மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட புகாரின் மீது இப்படி கிருஷ்ணமூர்த்தி தான் இதை செய்தார் என்று சைபர் கிரைம் காவல்துறை கண்டறிந்தது. இருந்தும்
மேலும் வேலை நடைபெற்ற ஒவ்வொரு இடங்களிலும் வேலைகள் தடுக்கப்படுவதும் ஒப்பந்ததாரர்கள் அல்லது நீர்வளத் துறை அதிகாரிகள் புகார் அளிப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் எந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எலத்தூர் செட்டிபாளையம், காஞ்சிகோயில் சூரியம்பாளையம் ஆயப்பரப்பு சிவகிரி விளங்காட்டு வலசு ஆகிய இடங்களில் வேலைகள் பாதியில் முடக்கப்பட்டது. வேலைகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகமோ, நீர்வளத் துறை செயலாளரோ முழுமையாக உதவி செய்யவில்லை. மாறாக தொழில்நுட்ப ரீதியாக சுவர் எழுப்ப வேண்டிய இடத்தில் மண்ணை கொட்டி கரையை மூடிவிட்டு போங்கள் என்று வன்முறையாளர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளும்படி நீர்வளத் துறை அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டனர். அவ்வாறே செய்து தருவதாக கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் அவர்கள் பொதுவெளியில் காஞ்சிக்கோயில் பகுதியில் பேசி உறுதி கொடுத்தார். வேலை செய்வதற்கான அமைதியான சூழலை மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறை செயலாளரும் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறிவிட்டனர் . இதனால் சீரமைப்பு வேலை செய்யும் பல்வேறு நிலை பணியாட்களும் பணியிடங்களில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டனர் . இதனால் சீரமைப்பு வேலைகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. நடை பெற்று வரும் இந்த அடாவடித்தனங்கள் குறித்து செய்தியாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் சீரமைப்பு எதிர்ப்பு அணியின் தலைவர் ரவி நேரடியாக செய்தியாளர்களுக்கு தொலைபேசி செய்து “நீங்கள் எங்களைப் பற்றி எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நேரில் வருவோம்” என்று அச்சுறுத்தல் விடுத்து பதிவு செய்து காணொலிகள் வழியாக whatsapp குழுக்கள் மூலம் பரப்புரை செய்து வந்தார் . தனது அணியினரை வன்முறைக்கு தோண்டி செய்தி ஊடகங்களை அச்சுறுத்தி வந்தார். அதேபோல சீரமைப்பு வேலைகள் நடைபெற வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டால் ரவிஅவர்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதோடு அதை குரல் ஒலி பதிவுகள் செய்து சமூக வலைதளங்களில் பரப்புரையும் செய்து வந்தார். சுருக்கமாகச் சொன்னால் கடந்த மூன்று மாத காலம் நடைபெற்ற சீரமைப்பு வேலைகள் முழுவதும் ரவி கும்பலின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அரசு இயந்திரம் முறையாக வேலை செய்யவில்லை! அரசுஇயந்திரம் அதிகாரத்தில் உள்ளவர்களால் முடக்கப்பட்டு விட்டது. .இந்நிலையில் தான் வேலைகள் முடியாத நிலையில் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று இந்த சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் பிரச்சனைகள் செய்ய தொடங்கி விட்டனர். இரண்டு மாத காலம் கால்வாய்க்குள் இறங்கி பல்வேறு இடங்களில் வேலைகளை பெருமளவு தடுத்து விட்டனர். இதனால் வேலைகள் திட்டமிட்டபடி முன்னேறவில்லை.
அரசியல் பிரமுகரின் பின்னணியுடன் ஒரு கூட்டத்தை கூட்டி ஆகஸ்ட்- 11ஆம் தேதி நீர்வளத்துறை அலுவலகத்தை சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டனர். வெளிப்படையாகவே பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரமுகர் ஆற்றல் அசோக் குமார் என்பவர முன் நின்று இவைகளை செய்தார் .
கடைசி 30 நாட்கள் வேலைகளை முடிக்க வேண்டும் என்ற போர்வையில் வேலை செய்யும் இடங்களுக்குச் சென்று வேலை செய்வதை தடுத்து வந்தனர். மொத்தத்தில் சீரமைப்பு வேலைகள் திட்டமிட்டபடி நடைபெறாமல் சீர்குலைத்து விட்டனர். நீர்வளத்துறை அதிகாரிகள் நீர் திறக்க வாய்ப்பே இல்லை என்பது தெரிந்தும் தண்ணீர் திறப்பதற்காக அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணையும் பெற்றனர் கால்வாயில் தண்ணீர் செல்லவே முடியாது என்பது தெரிந்தும் நீர்வளத் துறையின் தவறான நடவடிக்கையால் அணை திறப்பு நாடகம் ஆகஸ்ட் 15ல் நடத்தப்பட்டது. எவ்வித முன் யோசனையும் இன்றி செயல்பட்டு வரும் இந்த அதிகாரிகளால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நற்பெயருக்கும் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களின் நற்பெயருக்கும் தீராத களங்கத்தை ஏற்பட்டு விட்டது. கீழ் பவானி திட்ட வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக பாசன திட்டங்களின் வரலாற்றிலும் இல்லாத வகையில் அணைதிறப்பதாக அரசாணை வெளியிட்டு விட்டு அணையை திறப்பதாக போக்குக் காட்டி அணையை மூடியது நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த நெருக்கடிகள் வந்திருக்காது என்பதை தமிழக முதல்வர் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறோம். இனிமேலாவது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலையிட்டு கீழ்பவானி சீரமைப்பு வேலைகள் உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி சீரமைப்பு வேலைகள்நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் 18/08/2023