குடிநீர் பிரச்சனை என்று பூச்சாண்டி காட்டி ஆயக்கட்டு தண்ணீரை சட்ட விரோதமாக பறிக்க முயலும் சுயநல கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!
கீழ் பவானி பாசனத்தில் சட்டப்படியான ஆயக்கட்டு பாசன உரிமையைப் பறிக்கும் சூழ்ச்சிகள்!
உயர் நீதிமன்றத்தால் புறந்தள்ளப்பட்ட வாதங்களை மேலும் மேலும் முன் வைத்துக் கொண்டே இருப்பது மக்களை ஏமாற்றுவதும் பித்தலாட்டம் செய்வதுமாகும். பழுதடைந்த கால்வாயை சீரமைப்பு செய்வதை வெளிப்படையாக அரசு அறிவித்துள்ளது. கால்வாய் முழுவதும் கான்கிரீட் செய்யப்படவில்லை என நீர்வளத் துறையின் வேலை திட்ட அறிக்கை தெளிவாக முன்வைக்கிறது . இருந்த போதும் திரும்பத் திரும்ப கான்கிரீட் என்று ஊரை ஏமாற்றுகிறார்கள் மக்களை திசைதிருப்புகிறார்கள்.
குடிநீர் பஞ்சம் வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
கீழ்பவானி பாசன பரப்பில் பாய்ந்து வரும் 36 டிஎம்சி தண்ணீரும் இந்தப் பகுதியில் ஒரு சொட்டு கூட குறையாமல் சீரமைப்புக்கு பிறகும் நிலங்களுக்கு பாசனத்திற்கு வழங்கப்படும். இன்னும் கடைமடை பகுதிகளுக்கு அதிகமான தண்ணீர் போய் சேரும் அப்படி இருக்கும் போது கடைமடையில் தற்போது இருந்து வரும் தண்ணீர் பஞ்சம் தீருமே தவிர தண்ணீர் பஞ்சம் எப்படி உருவாகும்? 4 லட்சம் மரங்கள் வெட்டப்படுவதாக கூப்பாடு போட்டவர்கள், பசுமை தீர்ப்பாயத்தில் பொய் வழக்கு போட்டவர்கள், அரசு பதினைந்தாயிரம் மரங்கள் என்று ஆவணப்படுத்தி கொடுத்து விட்டது. இப்பொழுது பதினையாயிரம் மரங்களையும் வெட்டக்கூடாது என சுற்றுச்சூழல் காவலர்களாக மாறிவிட்டார்கள். சாலை விரிவாக்கம் இதர வேலைகளுக்கு மரங்கள் வெட்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் வாய் திறக்காத இந்த ‘சூழல் காவலாளிகள்’ பாசனக் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள மரங்களை அகற்றுவதை சூழல் பிரச்சனையாக்கி ஏமாற்றப் பார்க்கிறார்கள் . பாசனக் கால்வாய் என்பது தண்ணீர் கொண்டு செல்வதற்கு வெட்டப்பட்டது தானே தவிர மரங்கள் வளர்க்கும் வனப்பகுதி அல்ல! என்பதை இந்த ‘அறிவாளிகள்’ புரிந்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் திருடர்களின் பம்மாத்து வேலைகளை மக்கள் அடையாளம் காண வேண்டும்
கீழ் பவானிப் பாசனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான கசிவுநீரையும் உரிமையாக்கி கொண்டு ஆயக்கட்டுப்பாசனதாரர்களின் உரிமையைப் பறிக்கும் சட்டவிரோத பயனாளிகளின் ஏமாற்று வேலைகளே இந்த மனு கொடுத்தல் நாடகம்!
உயர் நீதிமன்றத்தாலும், மாவட்ட நிர்வாகத்தாலும் தீர்த்து வைக்கப்பட்ட பிரச்சனையை மீண்டும் மீண்டும்கிளப்பிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது!
கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம்
கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு. 20/05/2023