கீழ்பவானி பிரச்சனைகள் இரட்டை வேடம் போடுவது திமுகவா? பாரதிய ஜனதா கட்சியின் ஜி.கே.நாகராஜனா? தற்போது தமிழ்நாட்டில் கீழ் பவானி பாசன கட்டமைப்பு மறு சீரமைப்பு செய்யும் ரூ 710 கோடி திட்டம் , உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது . இந்தத் திட்டத்திற்கான அடிக்கல்லை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டினார்.
இந்தத் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு 2021 இல் ஆட்சிக்கு வந்த பிறகு நடைமுறைப்படுத்தும் என்று மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார். அத்தோடு மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களால் கொண்டுவரப்பட்ட சீரிய திட்டம் என்று பொதுவெளிகளில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வெளிப்படையாகவே பாராட்டி வந்தார்.
சீரமைப்பை எதிர்ப்பவர்களை ஒழுங்கு செய்ய ஈரோடு அமைச்சர் சு முத்துசாமி அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டும் சு முத்துசாமி அவர்கள் சீரமைப்பு எதிர்ப்பாளர்களோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார். கால்வாயை துறை அதிகாரிகளோடு நேரடியாக ஆய்வு செய்தார் . சு.முத்துசாமி அவர்களின் முயற்சி நடந்து கொண்டிருந்த போதே நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோவையில் ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் இந்த பாசனப்பகுதியின் அமைச்சர்கள் சு .முத்துசாமி, மு பெ சாமிநாதன், செந்தில் பாலாஜி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உட்பட ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களும் நீர்வளத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்த முயற்சியும் இறுதித் தீர்வை எட்ட உதவவில்லை. எனவே பாசன அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை 31 /03 /2023 இல் வழங்கியது . உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சுற்றுச்சூழல் அணிபொறுப்பாளர் கார்த்திகேய சிவ சேனாபதி அவர்கள் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.
இந்நிலையில் 03/05/ 2023 ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நடத்திய உயர்நிலைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் துரைமுருகன், சு முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் தலைமைச் செயலாளர் முதல்வரின் செயலாளர்கள் உதயச்சந்திரன் உமாநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறையின் சார்பாக தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் . உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வெளிப்படையாக இந்த கூட்டத்தில் முன்வைத்தார் . மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களின் கருத்தினை ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 04/05/ 2023 ஆம் தேதி திரு கார்த்திகேய சிவ சேனாபதி அவர்களை சென்னைக்கு அழைத்து கீழ் பவானி சீரமைப்பு திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பும் நல்க வேண்டும் இது திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்துகிற ஒரு பாசன கட்டமைப்பு சீரமைப்பு திட்டம் என்று அறிவுறுத்தியுள்ளார் . மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்ற கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டி வெளிப்படையாகவே அறிவித்து திட்டத்திற்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி உள்ளார் . இதற்கு நேர் மாறாக தானடித்த மூப்பாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சியின் ஜி கே நாகராஜன், திமுக இரட்டை வேடம் போடுவதாக நேற்று19/05/2023 இணையவழி கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
#பாஜக கட்சியின் #நாகராஜனிடம் நாம் எழுப்பும் கேள்வி
திமுக நிர்வாகி ஒருவர் திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு .க .ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு அதை ஒழுங்கு செய்து இன்றைக்கு கார்த்திகேய சிவ சேனாபதி அவர்களின் ஒத்துழைப்போடு திட்டம் நிறைவேறி வருகிறது. ஆனால் கீழ் பவானி பாசனத்தில் மூன்றில் ஒரு பங்கு பாசன நிலமுள்ள மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சி .கே. சரஸ்வதி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைந்து திட்டத்தைப் பற்றி அ வும் தெரியாமல் ஃ உம் தெரியாமல் மனம் போன போக்கில் ஜி.கே.நாகராஜன் உளறிக் கொண்டிருப்பது ஏன்? ஜி.கே.நாகராஜன் தீர்ப்பை தாறுமாறாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார். தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வரும் கூட்டமைப்பின் பொருளாளரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான செங்கோட்டு வேலுமணி அவர்கள் ஜிகே நாகராஜன் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு இந்தப் பாசனப்பகுதியோடு சிறிதும் தொடர்பற்று கோவையில் இருந்து கொண்டு ஜி.கே.நாகராஜன்தனது அரசியல் இருத்தலை வெளிப்படுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின்மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் மாறாக செயல்பட்டு வருகிறார். பாஜக ஜி.கே. நாகராஜன் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று இணையவழி கூட்டம் நடத்துவது ஊரை ஏமாற்றுவது அல்லாமல் வேறு என்ன? திமுக பொறுப்பாளர்ஒருவர் திட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்றவுடன் தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியவுடன் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு திட்டத்திற்கு ஆதரவு தருகின்றார்.
ஆனால் பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டத்தை மொடக்குறிச்சி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் முழுமையாக ஆதரிக்கும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தீர்ப்பு வாங்கி செயல்படுத்தும் திட்டத்தை
சீர்குலைப்பதற்கு சதி வேலை செய்து கொண்டிருக்கும் பாஜக ஜி கே நாகராஜன் திமுகவை விமர்சிப்பதற்கு கடுகளவும் தகுதியற்றவர். மிகப்பெரிய பாசனத் திட்டத்தின் சீரமைப்பு வேலைகளை மோடி அவர்கள் தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை எதிர்த்து தாறுமாறாக உளறிக் கொண்டிருப்பது ஜி.கே.நாகராஜனின் கபட நாடகமா? இல்லையா?
கி.வே.பொன்னையன் செயலாளர் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் 20/05/2023