கீழ்பவானி பாசனக் கட்டமைப்பை சீர்குலைக்க நடக்கும்சதிகளை முறியடிப்போம்! @##########@ ஒரு பாசனக் கட்டமைப்பு என்பது அதனுடைய நீரின் அளவு , பாசனம் பெரும் பகுதி , பாசனம் பெறும் காலம் , செய்யப்பட வேண்டிய பயிர்களின் வரம்பு என்றவாறு ஒழுங்கு செய்யப்பட்டு ஆயக்கட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது . கீழ்பவானி பாசனத்தை பொறுத்தவரை 1965 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 2.07இலட்சம் ஏக்கர் நிலங்கள் இரு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு மண்டலம் நன்செய் ஆகவும் அடுத்த மண்டலம் புன்செய் ஆகவும் ஒரு ஆண்டில் பாசனம் பெறும். அடுத்த ஆண்டில் சுழற்சி முறையில் மாற்றம் பெற்று தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட தண்ணீரின் அளவு 36 டி எம் சி பாசன பெரும் நிலத்தின் அளவு 2.7 லட்சம் ஏக்கர் ஆகும் . இவை அனைத்தும் காவிரி நடுவர் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு காவிரி நடுவர் மன்றம்கீழ் பவானி பாசனப் பகுதிக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 36 டி எம் சி தண்ணீர் என்பதை 8 டிஎம்சி குறைத்து 28 ஆக இறுதி செய்து விட்டது . இந்தப் பாசன அமைப்பில் பாசன முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது . ஆனால் இந்த பாசன அமைப்பில் ஆயகட்டு உரிமை பெறாதவர்கள் தண்ணீரை ஆயக்கட்டு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆயக்கட்டில் இல்லாத நிலங்களுக்கு தொலைதூரம் கொண்டு சென்று வணிகப் பயிர்கள் செய்து பெரும் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.
அத்தோடு தொழில் நிறுவனங்களும் தண்ணீர் வணிகர்களும் பாசன நீரை உறிஞ்சி ஆதாயம் பெற்று வருகின்றனர். பாசனப்பரப்பு முழுவதும் இயல்பாகவே நிலத்தடி நீர் செரிவூட்டப்பட்டு நீர் ஆதாரம் வளப்படுத்தப்படுகிறது மேலும் கீழ் பவானி பாசனப்பகுதியில் பவானி ஆற்றில் இருந்தும் காவிரி ஆற்றில் இருந்தும் போடப்பட்டுள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களால் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் எல்லா கிராமங்களுக்கும் வழங்கப்பட்டும் வருகிறது. கீழ்பவானி பாசன பரப்பில் தற்போது எங்குமே குடிதண்ணீர் பஞ்சம் இல்லை மேலும் மேலும் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் விரிவாக்கம் செய்து கொண்டு வளப்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது. உண்மைகள் இவ்வாறு இருக்க கீழ்பவானிக்கால்வாயை சீரமைத்தால் சட்டவிரோத பயனாளிகள் பாதிக்கப்பட்டு விடுவோம் என்ற பீதியில் பொய் புரட்டுகளை இட்டுக்கட்டி மக்களை பீதியூட்டி பெருந்துறையில் கூட்டம் சேர்த்தனர். ஆனால் நிலைமைகள் மாறியது நீதிமன்றத்தில் ஆயக்கட்டு பாசன உரிமையை உயர்த்திப் பிடித்து வலுவான தீர்ப்பு 31 /03 /2023 ஆம் தேதியில் வழங்கப்படும் விட்டது.
அதற்கு முன்பே சட்டவிரோத பயனாளிகளின் தூதுவனாக வழக்கு போட்ட ரவி அவர்களின் வழக்கு உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்கப்படாமல் அரசிடம் முறையிட வழிகாட்டப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ரவி அவர்கள் அரசிடம் முறையிட்டு அரசு முறையான விளக்கமும் அளித்து விட்டது . பசுமை தீர்ப்பாயத்திலும் சுற்றுச்சூழலைக் காட்டி சீரமைப்பு வேலைகளை முடக்க முனைந்தனர். அரசு சார்பில் மரங்களை வெட்டுவதற்கான முறைப்படியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டு பசுமை தீர்ப்பாயத்திலும் சீரமைப்பு வேலைகளுக்கு ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. சட்டப்படியான இவ்வளவு வேலைகள் நடந்ததற்கு பின்பும் ஈரோடு மாவட்ட அமைச்சர் அவர்களின் பெரு முயற்சியால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினார். சட்டப்படி உரிமை பெற்ற பாசனதாரர்களின் அமைப்புகள் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதைக் கூட சமரசம் செய்து கொண்டு மாண்புமிகு அமைச்சர் சு .முத்துசாமி அவர்கள் முன்வைத்த தீர்வை ஏற்று ஒப்பந்தத்திற்கு முன்வந்து ஒப்பந்தமும் நடந்தேறி விட்டது.
கார்த்திகேய சிவ சேனாபதி அவர்களும் முதல்வர் அவர்களின் தலையீட்டுக்கு பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு தனது அணியினரோடு சீரமைப்பு வேலைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க முன்வந்துள்ளார்கள்.
இந்நிலையில் சட்டவிரோத பயனாளிகளை காப்பாற்றுவதற்காக ரவி தரப்பினர் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தால் ஏற்கப்படாத கோரிக்கைகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்பி வருகின்றனர் .
இந்தப் பொய் பிரச்சாரங்கள் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமையைப் பறிக்கும் சதி நடவடிக்கையாகும்.
உயர் நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் ஏற்காமல் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உள்ளிட்டு நான்கு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை உட்பட சு .முத்துசாமி அவர்களின் இடைவிடாத முயற்சியால் உருவாக்கப்பட்ட உடன்பாட்டையும் ஏற்காமல் தானடித்த மூப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சீர்குலைவு சக்திகளுக்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து முடிவு கட்ட வேண்டும்.
சட்டத்திற்கும், நிர்வாகத்திற்கும் கட்டுப்படாமல் மனம் போன போக்கில் பொய்களையும் தவறான கருத்துக்களையும் மக்கள் நடுவில் பரப்புவதை இனியும் அரசு அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி, பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து விரிவான மனுக் கொடுத்து கோரிக்கை வைத்துள்ளோம்.
மாண்புமிகு அமைச்சர் சு. முத்துசாமி அவர்களும் குழுவினரை சந்தித்து நடைபெற்றுக் கொண்டுள்ள வேலைகள் பற்றி தெரிவித்து எந்தத் தொய்வும் இன்றி சீரமைப்பு வேலைகள் நடைபெறுவதற்கு அரசு நிர்வாகம் துணை நிற்கும் என்ற உறுதி அளித்துள்ளார்கள் . சட்டவிரோத நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும் அதை தமது கவனத்திற்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்.
அரச்சலூரில் அறிவித்துள்ள சட்டவிரோத கடை அடைப்பு பற்றியும் நத்தக்காடையூரில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறிவித்துள்ள பொதுக்கூட்டம் பற்றியும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இனியும் சட்டத்தையும் நீதியையும் நிர்வாக அமைப்பையும் மதிக்காது செயல்படும் அராஜகக் கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்பதனை இன்று(18/05/23) மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளோம்
கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம்
கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு
18/05/2023