கீழ்பவானி சீரமைப்பு வேலைகளை நிறைவேற்று!
அனைத்து கடைமடை விவசாயிகளின் ஆயக்கட்டு உரிமையைக் காப்பாற்று!
கீழ் பவானி சீரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த சீரமைப்பு வேலைகளின் நோக்கம் கீழ் பவானி பாசனத்தில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் உரிய தண்ணீரை உரிய காலத்தில் உரிய அளவு வழங்க வேண்டும் என்பதுதான். கீழ் பவானிக் கால்வாயானது வடிவமைக்கப்பட்ட பொழுது அதன் கசிவு நீரின்அளவு வினாடிக்கு 600 கன அடி என்று கணக்கிடப்பட்டது .ஆனால் 65 ஆண்டுகால செயல்பாட்டின் காரணமாக கட்டுமானங்கள் வலுவிழந்து போய்விட்டது. கரைகள் பலம் இழந்து விட்டது இதனால் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் அதிகமாக கசிவு ஏற்பட்டு வருகிறது. கால்வாயில் விடப்படும் தண்ணீரில் விநாடிக்கு900 கன அடி தண்ணீர் கசிவு நீராக போய்விடுகிறது. உபரியாக ஏற்படும்விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் கசிவு காரணமாக அனைத்துக்கடைமடை பகுதியில்(பவானி பகிர்மானம் ஊஞ்சலூர் பகிர்மானம் சென்னசமுத்திரம் பகிர்மானம் விரிவாக்க கால்வாய்) உள்ள 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள தமது ஆயக்கட்டு உரிமையை இழந்து வருகின்றன. நீர்வளத் துறையின் தொடர்ந்த ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கென அமைக்கப்பட்ட மோகனகிருஷ்ணன் குழுவின் அறிக்கையும் மிகத் தெளிவாக கடைமடை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதைஉறுதி செய்து ஒரு சீரமைப்புத் திட்டத்தை முன் வைத்தது . மோகன கிருஷ்ணன் குழுவின் பரிந்துரையின் படி முன்வைக்கப்பட்ட சீரமைப்புத் திட்டத்தை மாண்பமை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு ஏற்றுக்கொண்டு கடைமடை விவசாயிகளின் உரிமையைக் காக்க ஏழு வல்லுனர் குழுவின் பரிந்துரைப் படியான அரசாணை எண்: 276 ஐ நிறைவேற்ற வேண்டும் என்று 31 /03 /2023 அன்று தெளிவான ஆணையும் வெளியிட்டுள்ளது. மே 8ஆம் தேதி நீர்வளத் துறை ஒரு தெளிவான வேலைத்திட்ட அறிக்கையையும் கொடுத்துள்ளது. அந்த வேலை திட்ட அறிக்கையை நிறைவேற்றுவதற்கு வேலைகளை செய்யும் நிறுவனங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தின் இன்னொரு பிரிவு ஆணையிட்டுள்ளது.
இவ்வாறு சட்டப்படி நடைபெறும் வேலைகளை பலவந்தமாக தடுத்து நிறுத்தி பக்கச்சுவர் அமைப்பதில் தடங்கல் ஏற்படுத்தி வருகின்றனர் .தோண்டப்பட்ட கால்வாய்களை மணல் மூட்டைகளைக் கொண்டு அடுக்க வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாகவே சீரமைப்பு எதிர்ப்பாளர்கள் அதிகாரிகளிடம் போராடிவருகின்றனர். இது கடைமடை விவசாயிகளின் ஆயக்கட்டு உரிமையை மட்டும் அல்ல கீழ்பவானி பாசனத்தையே சீர்குலைக்கும் செயலாகும். கடைமடை விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாக்க நீர்வளத் துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாகக் கொடுப்பதற்காக அனைத்துப் பகுதி கடைமடை விவசாயிகளும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஜூலை 4 ஆம் தேதி காலை பெருந்திரளாக மனு கொடுத்து முறையீடு செய்ய உள்ளோம்.
- மொஞ்சனூர் சதாசிவம்
- விரிவாக்க கால்வாய் கடைமடை பகுதி.(கருர் மாவட்டம்)
- வேலுசாமி
- மங்கலப்பட்டி கடைமடை பகுதி
- (திருப்பூர் மாவட்டம்)
- கே.பெரியசாமி
- சென்ன சமுத்திரம் பகிர்மானக்கடைமடை பகுதி
- (ஈரோடு மாவட்டம்)
- திருமூர்த்தி
- ஊஞ்சலூர் பகிர்மானக் கடைமடை பகுதி
- (ஈரோடு மாவட்டம்)
- ஏ.இராமசாமி
- பவானி பகிர்மானம் கடைமடை பகுதி
- (ஈரோடு மாவட்டம்)
03/07/2023