நீர்வளத்துறை மேற்கு மண்டல தலைமைப் பொறியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா! +++++++++++
மேற்கு மண்டலத்தின் நீர்வளத் துறை தலைமை பொறியாளராக கடந்த ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றி நாளை(31/05/2023) பணி நிறைவு செய்யவுள்ள பொறிஞர் திரு பொ. முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு ஈரோட்டில்(29/05/2023) நடத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் என்னும் வறண்ட நிலத்தில் ஒரு சிற்றூரில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் திரு முத்துசாமி அவர்கள்.
பொறியியல் கல்வி கற்று பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உதவி பொறியாளராக பணியமர்த்தம் பெற்றுள்ளார். குறைவான தண்ணீரில் மிக அதிகமான பரப்பளவு பாசனம் கொண்ட பாசன அமைப்புதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். தவிரவும் கேரள அரசோடு அன்றாடம் உறவு கொண்டு தண்ணீரைப் பகிர்ந்து பல்வேறு அணைகளின் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து அதை மிக நீண்ட கால்வாயின் வழியாக கரூர் மாவட்டம் வரை கொண்டு வர வேண்டிய கடுமையான பணியை எதிர்கொண்டு செய்வதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட நீர்வளத் துறையின் கடமையும் பொறுப்பும் . நீண்ட தூரம் வருகிற கால்வாயில் நடக்கிற தண்ணீர் திருட்டுகள் தண்ணீர் திருடர்களின் அரசியல் பலம் ,பணபலம் இவைகளை எல்லாம் முறியடித்து கடைமடைக்கு தண்ணீர் கொடுப்பதில் பெரும்பங்காற்றியவர் பொறிஞர் முத்துசாமி. அவருடைய ஆற்றலால், அணுகுமுறையால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டலத்தின் தலைமை பொறியாளர் என்கிற உயர்ந்த நிலைக்கு தன்னை தகவமைத்துக்கொண்டவர். நீர்வளத் துறையில் அனுபவமும் பரந்த அறிவும் கொண்ட அமைச்சர் துரைமுருகன் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
பரம்பிக்குளம் ஆழியாறு ,அமராவதி பாசன திட்டங்களில் உள்ள சிக்கல்களை நீர்வளத் துறை அமைச்சர்களுக்கு மிகச் சரியாக எடுத்து முன்வைத்து பிரச்சனைகளை தீர்த்து வந்திருக்கின்றார் . கடந்த ஒன்னரை ஆண்டு காலமாக கீழ்பவானி சீரமைப்பு பிரச்சனையில் நீர்வளத் துறை எதிர்கொண்ட சிக்கல்களை மிக லாவகமாகக் கையாண்டு பிரச்சனையை நீர்வளத் துறை அமைச்சர் மூலம் முதல்வர் வரை கொண்டு சேர்ப்பதில் வல்லமை பெற்றவர். மாற்றுக்கருத்துள்ள விவசாய அமைப்பு தோழர்களிடமும் தானே அணுகி தனக்கே உரிய மென்மையான குரலில் பேசி தொழில் நுட்ப விளக்கங்களை அளித்து திட்டம் பற்றி புரியாமல் இருந்தவர்களுக்கும் திட்டத்தை புரிய வைத்து திட்டத்திற்கு ஆதரவு தரும்படி மாற்றியமைத்தவர். பொறிஞர் முத்துசாமி அவர்களின் அணுகுமுறையும், செயல் பாங்கும் ஒரு தலைமை நிலையில் இருக்கின்றவர்கள் எவ்வாறு இருந்து செயல்பட வேண்டும் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டாகும்.
கடைக்கோடி விவசாயி தொலைபேசி செய்தாலும் அவரது சந்தேகம் தீரும்வரை ஒரு தலைமை பொறியாளர் விளக்கம் அளிப்பது திரு முத்துசாமி அவர்களின் தனி இயல்பு . அதே போல் அலுவலர்களும் தெரிவித்தார்கள் கடைசி நீராளியாக இருக்கிற பணியாளர் வரை அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கு வழிகாட்டி உதவி வந்திருக்கின்றார் பொறிஞர் முத்துசாமி அவர்கள். ஒரு எளிய குடும்பத்தின் பிள்ளை தொழில்நுட்பக் கல்வி பெற்று உயர்ந்தால் மிகச் சிறந்த தொண்டாற்ற முடியும் என்பதற்கு இலக்கணமாய் அமைந்துவிட்டார்.
முத்துசாமி அவர்கள் பணி நிறைவு செய்தாலும் அவருடைய நீர் மேலாண்மை அறிவையும், ஆற்றலையும் அந்தத் துறையும் பயன்படுத்த வேண்டும் :உழவர் இயக்கங்களும் பயன்படுத்த வேண்டும் . பயன்படுத்துவோம் என்ற கோரிக்கையை அவரிடம் நேற்று அனைவரும் முன் வைத்துள்ளோம். பணி நிறைவு பெற்று விடைபெறும் மேற்கு மண்டல பொறிஞர் முத்துசாமி அவர்களைப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். அவர் ஆற்றிய பெரும் கடமைக்கு நன்றி பகர்கிறோம்.
நிகழ்வு தலைமை : பொறியாளர் ஐயா. இராமசாமி துணைத்தலைவர் கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு. முன்னிலை: ஆர்.எம்.பழனிசாமி மொடக்குறிச்சி முன்.ச.ம.உ வரவேற்புரை: வி எம் கிருஷ்ணமூர்த்தி கூட்டமைப்பு இணைச் செயலாளர். தொகுப்புரை:இரா.ஈஸவரமூர்த்தி கூட்டமைப்பு செயலாளர்
வாழ்த்துரை:எஸ்.பெரியசாமி தலைவர் கீ.ப.ஆ.நி.உ.சங்கம்.
கி.வே.பொன்னையன் செயலாளர் கீ.ப.ஆ.நி.உ.சங்கம். எம்.வி.சண்முகராஜ் தலைவர்.புகழூர் பாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் பாபு. பாசன சபை பா.ம.வெங்கடாசலபதி இணைச்செயலாளர் கூட்டமைப்பு. பொறியாளர் சங்கம் சார்பில் உதயக்குமார் உதவி செயற் பொறியாளர் நன்றி உரை: சாலைப் புதூர் பெரியசாமி இணைச்செயலாளர் கூட்டமைப்பு . L15,L14,L13,L10,L9,L8,L5,L3,L2,M7,M1 ஆகிய பாசன சபையின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்வு அனைத்தையும் தோழர் பாலு அவர்கள் பதிவு செய்ததோடு வாழ்த்து மடலையும் கலை நயத்தோடு அணியப்படுத்தி கொடுத்திருந்தார். ஒரு அரசு பணியாளர் தனது பணிக்காலத்தில் செய்கின்ற வேலைகளை சமூகம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்பதை ஈரோட்டில் நடந்த பணி நிறைவு பாராட்டு நிகழ்வு எடுத்துக்காட்டியது.
குழுவிற்காக பொன்னையன் 30/05/2023