மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கீழ் பவானி முறை நீர் பாசன கூட்டமைப்பின் துணைத் தலைவர் பொறியாளர் இராமசாமியாகிய எனது வேண்டுகோள்….. ஐயா, நான் 1960 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியான கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்று பொதுப்பணித்துறையில் ஏழாண்டு காலம் பணி செய்தவன்.
பவானி கரையொட்டிய எங்கள் நிலங்களில் நீர் ஆதாரம் நன்கு இருந்ததால் வேளாண்மை செய்ய ஊருக்கு வந்தவன். அண்ணாவையும், கலைஞரையும் பின் தொடர்ந்து தமிழினம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாறா பற்றாளனாய் அன்று முதல் இன்று வரை இயங்கி வருகிறேன்.
என் வாழ்நாளில் 30 ஆண்டு காலத்தை கீழ் பவானி பாசன கூட்டமைப்பில் செலவிட்டு வருகின்றவன். கீழ்பவானிக் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு கலைஞர் காலத்தில் கொண்டு வந்த திட்டத்தை தற்போது அரசாணை எண் 276 ல்காண்பவன் . இந்த அரசாணையை நிறைவேற்றிக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த படிக்கட்டுகளில் ஏறி ஓராண்டு காலம் நீதி கேட்டு போராடினேன். மாண்பமை உயர்நீதிமன்றம் எனது விண்ணப்பத்தை ஏற்று அரசாணை எண் :276 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். கீழ்பவானி பாசன கட்டமைப்பு வேலைகள் இரண்டு ஆண்டு காலமாக முடங்கி கட்டுமான செலவுகள் கூடியுள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது வேலைகளில் பெரும்பகுதியை முடித்து விட வேண்டும் என்ற முனைப்போடு நாங்கள் இயங்கி வருகிறோம். ஆனால் நீர்வளத் துறை சார்பில் முழுமையான வேலையை செய்வதற்கான எந்த உறுதிப்பாட்டையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பைப் பெற்ற நான் அந்தத் தீர்ப்பினை செயல்படுத்த “வீதிக்கு வந்து நீதி கேட்கின்றேன்” இது எனக்கு மகிழ்ச்சியானது அல்ல! என் உள்ளத்தில் எரிமலையாய் குமுறும் நியாயம் கேட்கும் உணர்வின் வெளிப்பாடாய் என்னை ஈகம் செய்தாவது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிலை நாட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் . எனது உறுதி மிக்க முடிவினை ஆதரித்து எங்கள் கூட்டமைப்பின் செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி செயல் வீரர் இரா. ஈஸ்வரமூர்த்தி அவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார் தங்கள் மீது மாறாத மதிப்பும் கொண்டுள்ள நான் தங்கள் அரசுக்கு இப்படியான முறையில் ஒரு செய்தியை கவனப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது கண்டு வருத்தமடைகிறேன். தாங்கள் தலையிட்டு இந்தப் போராட்டத்திற்கு ஒரு நல்ல தீர்வினை தாருங்கள் என அன்போடு வேண்டுகிறேன்.
எ .இராமசாமி துணைத்தலைவர் கீழ்பவானி மழை நீர் பாசன கூட்டமைப்பு
அநீதிக்கு எதிராக அணிதிரள்வோம்! ——++++++++++++++++++++++—————
திட்டமிட்டபடி நாளை ( 08/05/2023) செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் ஆயக்கட்டு உரிமை காக்க உழவர்கள் அனைவரும் அணி திரண்டு வாருங்கள்!
அழைக்கும் போராட்டக் குழூ