தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்………

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு சாமானியன் ஆட்சி திராவிட இயக்கத்தால் தொடங்கி வைக்கப்பட்டது . மிகச் சாமானியக் குடும்பத்தில் பிறந்த தாங்கள் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல்அமைச்சராக வீற்றிருக்கின்றீர்கள். இதற்கு முழுமுதற் காரணம் பெரியார் எழுப்பிய சமூக நீதி முழக்கமாகும். பண்ணையார்களும் தொழில் அதிபர்களும் ஆண்ட நாட்டில் எளிய மக்கள் அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி வைத்தது. ஆனால் இந்த ஆட்சியில் அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படுவதில்லை.

உயர்நீதிமன்றம் சென்று மக்கள் போராடித் தீர்ப்புகளைப் பெற்று அரசாணைகளை நிறைவேற்றுகிற நிலை இருந்து வருகிறது.

அப்படித்தான் கீழ்பவானி பாசனக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக மிகப்பெரிய செலவில் வகுக்கப்பட்ட திட்டம் சட்டவிரோத சக்திகளால் இரண்டு ஆண்டு காலம் முடக்கப்பட்டது . எளிய விவசாயிகளாகிய நாங்கள் உயர்நீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளில் ஏறி உழவர்களின் ஆயக்கட்டு உரிமையைப் பாதுகாக்கும் தீர்ப்பை பெற்று வந்தோம். அந்தத் தீர்ப்பினை நிறைவேற்ற வேண்டும் என்று தாங்கள் கலந்து கொண்ட( 03/05/2023)உயர்நிலைக் கூட்டத்தில் தாங்கள் தெளிவாக அறிவுறுத்தி இருக்கின்றீர்கள். மேலும் இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு தடங்களை ஏற்படுத்தி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேயன் சிவ சேனாபதி அவர்களை தாங்கள் நேரில் அழைத்து கீழ் பவானி சீரமைப்பு வேலைகளுக்கு தடையாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தியும் இருக்கின்றீர்கள். இருந்தாலும் கூட தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு அரசு நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த விதமான உறுதிமொழியும் இதுவரைக் கிடைக்கவில்லை!

எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதிமிக்க பற்றாளர்களான 85 அகவை கொண்ட மூத்த பொறியாளர் ஐயா இராமசாமி அவர்களும் 60 வயதைக் கடந்த இரா .ஈஸ்வரமூர்த்தி அவர்களும் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மே -8ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த இரண்டு பேரும் இரண்டு லட்சம் ஏக்கர் பாசனத்தை நிர்வாகித்து வருகின்ற கீழ்பவனி முறை நீர் பாசன கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து கால் நூற்றாண்டுகளாக நீர் நிர்வாகம் செய்வதற்கு பேரு உதவி புரிந்து வருகின்றவர்கள். இந்தத் தலைவர்கள் உயர்நீதிமன்றம் சென்று தீர்ப்பை பெற்ற பிறகும் இந்த அரசு நிர்வாகத்தில் அந்தத் தீர்ப்பின்படி வேலைகள் நடைபெறும் என்பதற்கு எந்த உறுதி மொழியும் அளிக்கப்படவில்லை. எனவே தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டி “வீதிக்கு வந்து நீதி கேட்கின்ற” அவலமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்களால் போற்றப்படும் திராவிட மாடல் அரசுக்கு. இதுபோன்ற போராட்டங்கள் அவப்பெயரைத்தேடித் தரும் . எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்கி தீர்ப்பின்படி கீழ் பவானி சீரமைப்பு வேலைகள் நடக்கும் என்ற உறுதிமொழியை தருவது தான் செயல்படுகிற அரசுக்கு இலக்கணமாக இருக்கும் என்று கருதுகிறோம். மே-8 ஆம்தேதி அவர்கள் நீதி கேட்டு வீதிக்கு வருகிறார்கள். அவர்களோடு ஆயிரக்கணக்கான விவசாயிகளும் வீதிக்கு வந்து நீதி கேட்க இருக்கின்றோம். மாண்புமிகு முதல்வர் அவர்களே!

தங்கள் ஆட்சியில் சாமானிய மக்களின் நீதிக்கான குரலை செவி கொடுத்து கேளுங்கள்….

சனாதனத்துக்கு எதிரான தங்களது போராட்டத்தில் கட்சி எல்லைகளுக்கு அப்பால் உங்களோடு என்றும் இணைந்த நிற்கின்ற எங்களைப் போன்றவர்கள் மனம் வெதும்புகின்றோம். எனவே தாங்கள் விரைந்து முடிவெடுத்து மூத்த தலைவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை விரைந்து முடித்து வைக்க வேண்டுகிறோம்.

கி.வே.பொன்னையன் செயலாளர் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம்  06/05/23

புகைப்படங்கள்

Tags:

Updated: