சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவ சேனாபதி மீது தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! +++++++++++++++++++++++++++++++++
கார்த்திகேய சிவ சேனாபதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராகவும் தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராகவும் இருக்கின்றார் . சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் சட்டக் கடமையும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏதோ தவறாக நீதிமன்றம் கொடுத்து விட்டதைப் போல கார்த்திகேய சிவ சேனாபதி சித்தரித்து வருகின்றார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பாக மக்களை திசை திருப்பும் நடவடிக்கை ஆகும் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் நீர்வளத் துறை மானிய கோரிக்கை அறிக்கையிலேயே கீழ்பவானி சீரமைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என நீர்வளத் துறையின் சார்பில் சட்டமன்றத்தில் கொள்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது . எனவே அரசின் கொள்கை முடிவென்பது சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகி இருக்கிறது . உண்மைகள் இவ்வாறு இருக்க ஏதோ தமிழ்நாடு அரசிற்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் விருப்பமே இல்லை என்பதை போல கார்த்திகேய சிவ சேனாதிபதி பொய் சித்திரத்தை உருவாக்க பார்க்கிறார்.
அதேபோல உயர் நீதிமன்றத்தில் மார்ச்-28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கை என்பது மாநில அரசின் சார்பில் நீர்வளத் துறை தாக்கல் செய்த அறிக்கை ஆகும். நீர்வளத் துறையின் அறிக்கையை அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்து பேசுகிறார் இதை கார்த்திகை சிவ சேனாபதி நீர்வளத்துறை அறிக்கைக்கு முரண்பட்டு அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் திட்டத்தை கைவிடுவதாக பேசியதாக வெளியில் பொய் பிரச்சாரம் செய்கிறார். நீதிமன்ற நடவடிக்கைகள் தெரிந்த அனைவருக்கும் தெரியும் எல்லா துறைகளுடைய நீதிமன்ற பதிலுரைகளும் அரசு தலைமை வழக்கறிஞர் மூலமாகத்தான் தாக்கல் செய்யப்படும். அரசு தலைமை வழக்கறிஞரின் வழிகாட்டலின் பேரில் தான் நீர்வளத்துறை நிலை அறிக்கையை (Status Report)தயாரித்து அனுப்புகிறது. எனவே அரசு வழக்கறிஞரருக்குஎன்று தனிப்பட்ட விருப்பமோ; கருத்தோ இருக்க முடியாது . அது போலத் தான் திறந்த நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்ற ஒரு நிகழ்வையே இட்டுக்கட்டி மக்களை திசை திருப்புகிற பொய்பிரச்சாரத்தை இவர் தொடர்ந்து செய்த வருகிறார்.
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பதாயிரம் மரங்களை வெட்டி சீரமைப்பு வேலைகளை செய்வதற்கு ஈரோடு திருப்பூர் மாவட்டங்களின் பசுமைக் குழு கூடி முடிவு செய்து அந்த முடிவின்படி ஈரோடு ,திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மிகத் தெளிவான ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆட்சித் தலைவர்களின் முறையான ஆணையை திசை திருப்பி 15 ஆயிரம் மரங்கள் என்று கூறிவிட்டு 4 லட்சம் மரங்களை வெட்டுகிறார்கள் என்று மிகப் பெரிய பொய் செய்தியை மக்களிடம் பரப்பி வருகிறார்.
ஆட்சி தலைவர்களின் ஆணையை கொச்சைப்படுத்தி மக்களைத் தூண்டிவிடும் சீர்குலைவு மற்றும் சதி வேலைகளை அரசு பொறுப்பில் இருக்கிற கார்த்திகேய சிவ சேனாபதி செய்து வருகிறார்.
இந்தக் கீழ் பவானி சீரமைப்பு வேலைகளை சுமுகமாக நிறைவேற்றுவதற்கு இரண்டு ஆண்டு காலம் இடைவிடாது முயற்சிகள் செய்து வருகிறார் அமைச்சர் சு .முத்துசாமி. அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் முதல்வரின் ஒப்புதலோடு இந்த வேலையை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு கொடுத்து கண்காணித்து வருகிறார் . உயர்நீதிமன்றம் மிகத் தெளிவாக மாவட்ட ஆட்சியர்களுக்கும், நீர்வளத்துறை செயலாளருக்கும், காவல்துறையின் கோவை மண்டலத் தலைவருக்கும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் இந்த வேலையை நிறைவேற்றுவதற்கு ஆணையிட்டு இருக்கிறது . உயர்நீதிமன்றம் என்பது சட்டத்தின் ஆட்சியை ஒழுங்கு செய்கிற ஒரு உயர்ந்த அமைப்பாகும். அவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு பிறகும் பொய்யான செய்திகளை மக்கள் நடுவில் பரப்பி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்க முயற்சி செய்ய திமுக சுற்றுச்சூழல் அணியின் பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி மக்களை தூண்டி விட்டு வருகிறார். உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கார்த்திகேய சிவ சேனாபதி மீது தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு .க .ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கி.வே.பொன்னையன் செயலாளர்
எஸ்.பெரியசாமி தலைவர் கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம்
சுப்பு மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் சங்கம்
11/04/2023